புதிய எழுத்தின் அடையாளம்
திறந்த இணையம் மனிதர்கள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளச் செய்திருக்கிறது -தொடர்ந்து எதையாவது எழுதும் ஆர்வம் கொடுக்கும் போலிருக்கிறது. ஒரு காலத்தில் காலை நான்கு மணிக்கே எதையாவது எழுத ஆரம்பித்து விடுவேன், அப்புறம் நேரம் கிடைக்கும்போதெல்லாம். இப்போது இரவு ஒன்பது மணிக்குத்தான் எழுத அமைகிறது, ஆனால் அந்த நேரத்தை மனம் எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு மனமயக்கமா இல்லை மாற்றமா என்பது உறுதியாக சொல்ல முடியவில்லை.
எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்டால் பிரமாதமாக இல்லை, ஆனால் எதை வேண்டுமானாலும் எழுதலாம். எழுதுவதற்குரிய நேரம் செலவிடும் முக்கியத்துவம் இருந்தால் போதும்.
ஜிபிடி சாட்டு பற்றி நிக் கேவ் கவித்துவமாக சில விஷயங்கள் சொல்லியிருக்கிறார், அந்தக் கட்டுரையை பரிந்துரைக்கிறேன்:
Songs arise out of suffering, by which I mean they are predicated upon the complex, internal human struggle of creation and, well, as far as I know, algorithms don’t feel. Data doesn’t suffer. ChatGPT has no inner being, it has been nowhere, it has endured nothing, it has not had the audacity to reach beyond its limitations, and hence it doesn’t have the capacity for a shared transcendent experience, as it has no limitations from which to transcend. ChatGPT’s melancholy role is that it is destined to imitate and can never have an authentic human experience, no matter how devalued and inconsequential the human experience may in time become.
What makes a great song great is not its close resemblance to a recognizable work. Writing a good song is not mimicry, or replication, or pastiche, it is the opposite. It is an act of self-murder that destroys all one has strived to produce in the past. It is those dangerous, heart-stopping departures that catapult the artist beyond the limits of what he or she recognises as their known self.
இதை தமிழாக்கம் செய்யவும் விரிவாக யோசிக்கவும் விரும்புகிறேன், ஆனால் நேரமில்லை, அடுத்த வேலை காத்திருக்கிறது.
ஒரு படைப்பாளியாய் நிக் கேவ் சொல்வது சரிதான், இயந்திரம் துன்பம் அறியாதது, துன்பமோ துயரமோ அறியாமல் படைப்பு இல்லை. தான் கடந்த காலத்தில் முயற்சி செய்து அடைந்ததை எல்லாம் அழித்துக் கொண்டு புதிய இடத்துக்குச் செல்வதே படைப்பாளியின் வெற்றி, அவள் சொன்னதையே வெவ்வேறு சொற்களில் சொல்லிக் கொண்டு இருப்பதில்லை. ஜிபிடி சாட்டு ஒரு படைப்பாளியா என்று கேட்டால் இல்லை என்றுதான் இந்த கோணத்தில் சொல்ல வேண்டும். ஆனால் படைப்பாளியைப் பார்க்காதே என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். ஜிபிடி சாட்டு எழுதிய சில கவிதைகள் நானூறு ஆண்டுகளுக்குப் பின் ஓலைச் சுவடி வடிவில் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவை இலக்கியமா என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல்கள், மதிப்பீடுகள் எவையாக இருக்கும்? அவற்றைக் கொண்டு இயந்திரம் எழுதிய கவிதையையும் மனிதர்கள் எழுதிய கவிதைகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியுமா?
முடியாது என்று நினைக்கிறேன். அதனால்தான் எதிர்காலத்தைக் கொண்டு சமகால இலக்கியத்தை மதிப்பிட முடியாது. இன்று ஒருவன் தன் எழுத்துக்கு என்ன விலை கொடுத்தான், தன் சொற்களின் பின் நின்று எதை இழந்தான், அது முக்கியம். அப்படி authenticate செய்து அடுத்த தலைமுறைக்கு அளிப்பதே விமரிசகன் கடமை. அதிலிருந்து விலகினால் நாம் விமரிசகர்களாக இருக்க முடியாது, அறிமுகம் செய்பவர்கள், மதிப்புரை எழுதுபவர்கள் என்ற அளவில்தான் நிற்க முடியும்.
உண்மையில் யோசித்துப் பார்த்தால் தேவைக்குத் தகுந்த மாதிரி எழுதினால் ஜிபிடி சாட்டுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? இன்று உள்ள நிலையில் verbal virtuosityயை இயந்திரங்கள் எட்டி விட்டன. நல்லா எழுதுவது இன்றுள்ள இலக்கியவாதிக்கு ஒரு தகுதியல்ல.