இரு திரைப்படங்கள்
நாளை நாளை என்று இந்த நாள் முழுதும் வீண் போனது. ஆனால் ஒரு படம் பார்த்தேன், இன்னொன்று முடித்தேன்.
King of Clones பார்க்க வேண்டிய படம். ஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொண்ட தென் கொரிய விஞ்ஞானி ஒருவரை மையம் கொண்ட ஆவணப் படம், ஆனால் முழுதும் அவரைப் பற்றிய படமல்ல. அவரைப் பற்றியும், வெவ்வேறு காரணங்களுக்காக க்ளோனிங் செய்ய விரும்புபவர்களைப் பற்றிய படம். தென் கொரிய விஞ்ஞானியை முழுமையாக நிராகரிப்பதில்லை, அவரது நியாயங்கள், அவரது பங்களிப்பு, அவர் செய்த துரோகங்கள் என்று எல்லாவற்றையும் சொல்கிறது. ஸ்டெம் செல் தெரபி செய்கிறேன் என்று மார்புக்குக்கீழ் செயலிழந்த ஒரு சிறுவன், அவனது அப்பா (அவர் ஒரு பாஸ்டரும்கூட) இருவரையும் ஏமாற்றியது ஒரு பெரிய கீழ்மையாக தெரிகிறது, படம் ஒரு மன்னிப்பு, உரையாடல் என்று அதைக் கடந்து செல்கிறது. எந்த விஷயத்திலும் சரி தவறு நிலைப்பாடு எடுக்காமல் படம் பிடித்திருக்கிறார்கள், எனக்கு அது சரியாகத் தெரியவில்லை. ஆனால் எல்லா விஷயத்திலும் என் நிலைப்பாடு இது என்று வெளிப்படுத்திக் கொள்ளச் சொல்பவன் நான், நடுநிலை இக்காலகட்டத்தில் சரிப்படாது என்பது என் உரையாடல் அனுபவம். நிச்சயம் பார்க்கலாம்.
இன்று பார்த்த இன்னொரு படம், Stingin Hot. Marginal Revolution தளத்தில் Alex Taberrok முதலியத்தையும் பணி சார்ந்த ஈடுபாடு மற்றும் மன நிறைவையும் முன்னிறுத்தும் படம் என்று எழுதியிருந்ததால் இதைப் பார்த்தேன். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. சொல்லப் போனால், இன்று வோக் ஏஜண்டா என்று பழிக்கப்படுவதன் ஆதார இலாபக் கணக்கு எங்கே துவங்குகிறது என்பதை துல்லியமாகச் சொல்லும் படம். இது அவசியம் பார்க்க வேன்டிய படம். டைவர்ஸிட்டி, இன்க்ளூசிவிட்டி, எம்பவர்மெண்ட், இம்மிக்ரேஷன் போன்ற விஷயங்களில் ஒரு மாதிரி லெப்ட் லிபரல் ஏஜண்டா இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் அது பிரச்சாரமாக இல்லை. பார்க்கவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நம்ப முடியாத கதை, ஒரு தேவதைக் கதைக்கு உரிய தன்மைகள் கொண்டது. அவசியம் பார்க்க வேண்டும். காரமான Cheetos கொண்டு மெக்ஸிகன் மார்க்கெட்டைக் கைப்பற்றி அழிவின் விளிம்பில் இருக்கும் நிறுவனம், லாபகரமாக மாறி, அதன் தொழிலாளர்களின் ஜீவிதத்தை மீட்டுக் கொடுத்த கதை. கதையின் முடிவில், நாயகனுக்கு, மல்ட்டிகல்சுரல் மார்க்கெட்டிங் மானேஜர் பதவி அளிப்பதில் விழுகிறது இன்றைய கலாசார போர்களின் வித்து.