நெடுநாள் நண்பர்
இப்போதெல்லாம் சரியான தூக்கம் வருவதில்லை. வாழ்க்கையில் ஒழுங்கு குலைந்து விட்டது. மொபைல், லாப்டாப், டிவி. பற்பல ஆப்கள், சானல்கள். துண்டு துண்டாய் உரையாடல்கள். கிண்டில். ஆர்வங்கள், கவலைகள். கை கால் வெட்டப்பட்டு வெவ்வேறு திசைகளில் வீசப்பட்டது போன்ற குவிமையம். இதை எழுதும் நேரம் இரவு ரெண்டே கால்.
ஏதாவது செய்ய வேண்டும். செய்வதற்கு எதுவும் இல்லை. இரண்டும் உண்மை.
இலக்கிய நண்பரைப் பார்த்தேன் (இனி பெயர்கள் குறிப்பிடப் போவதில்லை). இன்றும் அதே ஆர்வத்தோடு இருக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறது.
அவரது தொடர்ந்த ஆர்வத்தின் முக்கிய காரணம், அவருக்கு இலக்கியம் புத்தகம் சார்ந்த விஷயமல்ல, மனிதர்கள் சார்ந்த விஷயம். அதனால்தான் அவரால் இலக்கியம், இசை, விளையாட்டு, அரசியல், என்று எல்லா விஷயங்களிலும் ஈடுபாடு காட்ட முடிகிறது என்று நினைக்கிறேன். அவரது இலக்கியச் சுவை மனிதர்களோடு பழகுவதில் உள்ள சுவையின் நீட்சி, இந்த உலகம் அவருக்கு ரசிக்க அளிக்கும் பல விஷயங்களில் அதுவும் ஒன்று. அதனால்தான் ஸ்கேல், கடிகாரம், காலண்டர், பாரோமீட்டர், தர்மாமீட்டர், கால்குலேட்டர், ரயில்வே டைம் டேபிள், போன்ற சமாசாரங்கள் (தேவைப்பட்டால் ஜைரோஸ்கோப்) இல்லாமல் அவரால் புத்தகத்தைத் திறக்க இயலவில்லை. இந்த உலகம் பிரிக்க முடியாதபடி இலக்கியத்தில் ஒட்டியிருக்கிறது.
இலக்கியம் இந்த உலகுக்கு வெளியேயோ அதைவிட உயர்ந்த தளத்திலோ இல்லை, இந்த உலகின் விருப்பு வெறுப்புகள்தான் அதிலும் வெளிப்படுகின்றன என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார். இலக்கியம் அவருக்கு அளிப்பது மாற்று உலகம் அல்லது மாற்று அனுபவமல்ல, இந்த உலகம்தான் இலக்கியத்தில் உறுதிப்படுத்தப்படுகிறது. நடப்பில் உள்ளது போலவே சில சமயம் சரியாக, சில சமயம் தவறாக, சில சமயம் சுவையாக, சில சமயம் சலிப்பாக- சில சமயம் சப்பு கொட்டச் செய்கிறது, சில சமயம் சை என்று இருக்கிறது ஆனால் ஒரு போதும் சீ என்று சொல்லச் செய்வதில்லை.
வேலை செய்யும் நேரம் தவிர பிற சமயங்களில் அவரைத் தனியாக பார்க்க முடியாது, எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார். இதைக் கொண்டுதான் அவரது இலக்கிய ரசனையை, விமரிசன அணுகுமுறையை புரிந்து கொள்கிறேன்.
எனக்கு இலக்கியம் இந்த உலகை விட்டு வெளியேறும், வெளியேற வேண்டிய தேவை இல்லாத போதும் இந்த உலகை தொலைவில் நிறுத்தும் இடமாக இருந்தது. அவருக்கு தன்னை இந்த உலகில் இன்னும் பலமாக ஈடுபடுத்திக் கொள்ளும் இடமாக இருக்கிறது.
வெகு நாட்களுக்குப் பின் அவரைப் பார்த்தேன், பேசினேன். மகிழ்ச்சியாக இருந்தது. இலக்கியத்துக்கும் அவருக்கும் உள்ள உறவு இன்னும் உறுதியாக பூண்பட எல்லாம் வல்ல இறைவனை இந்த அர்த்த ராத்திரியில் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இந்த உலகின் சுவை போனால் அப்புறம் ரசிப்பதற்கு என்ன இருக்கிறது, வெறும் கற்பனையின் சுவை தன் நாவின் உதிரத்தைச் சுவைக்கும் ஒட்டகத்தின் அவலச் சுவை.