அவரவர் எச்சங்கள்
ஜிபிடிசாட் ஆங்கிலத்தில் மிக நன்றாகவே வேலை செய்கிறது. நாம் கேட்ட கேள்விகளுக்கு தக்க பதில் தருகிறது. மேற்கொண்டு கேள்வி கேட்டு தொடர்ந்து உரையாடல் நிகழ்த்த முடிகிறது. கவிதை கூட எழுதுகிறது.
நோஷன் என்ற ஆப்பில் ஒரு ஏஐ அசிஸ்டென்ட் வைத்திருக்கிறார்கள். ஒரு நீண்ட கட்டுரையை கொடுத்தால் அதன் சாரத்தை அளிக்கிறது. நாம் எழுதியதில் எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகளை சரி செய்கிறது. சுருக்குகிறது, விரிக்கிறது, விளக்குகிறது. சாதக பாதகங்கள் என்ன என்று கேட்டால் சொல்கிறது. ஒற்றுமை வேற்றுமை குறிப்புகள் அளிக்கிறது. கேள்விகளை தயார் செய்து தருகிறது. ஒரு சாதாரண மனிதனின் மூளை எப்படி வேலை செய்யுமோ அது போல் வேலை செய்கிறது.
கோராவில் கேள்வி கேட்டு பதில் பெறுவது போல் ஏஐ தேடுபொறிகள் வேலை செய்கின்றன. திருப்தியான பதில் கிடைக்கிறது. மனிதனின் ஆறாவது அறிவு அப்படி ஒன்றும் விசேஷம் இல்லை, அது இயந்திரத்தன்மை கொண்டது என்பதைக் காண முடிகிறது.
ஸ்டேபிள் டிப்யூஷன் மிக அழகான ஓவியங்கள் தீட்டுகிறது. பல்வேறு ஸ்டைல்களைப் பார்க்க முடிகிறது. அதனால் கதை கவிதை எழுத முடியாது என்று சொன்னால் அவர்களுக்கு இன்னும் விஷயம் பிடிபடவில்லை என்று பொருள். விஷயம் விளங்க விளங்க, நமது இடம் என்ன, நமது தனித்தன்மை என்ன என்ற கேள்விகளை தவிர்க்க முடியாது.
செயற்கை அறிவுக்கு ஆன்மாவோ மனமோ உண்டா என்பது சரியான கேள்வியல்ல. நமது அறிவும் ஆன்மாவும் மனமும் வெளிப்பாட்டளவில் எப்படி வேறுபடுகின்றன என்பதுதான் சரியான கேள்வி. அறிவு, மனம், கற்பனை என்ற வகைகளில் இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் வெளிப்பாட்டைக் கொண்டு வேறுபடுத்த முடியாது. செயல்பாட்டைக் கொண்டுதான் அறிஞனையும் கலைஞனையும் அடையாளம் காண வேண்டியிருக்கும்.
யார் தியாகம் செய்கிறார்கள், யார் தன் நம்பிக்கைகளுக்காகவும் சொற்களுக்காகவும் இழப்பை எதிர்கொள்கிறார்கள், யார் மனசாட்சியுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதெல்லாம்தான் நம்மைச் சொற்பெருக்கு இயந்திரங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முடியும். வாழ்வும் வாக்கும் என்பதே முக்கியமாக இருக்கும். நல்லா எழுதுவது ஒரு விஷயமில்லை, தான் எழுதியதற்கு மதிப்பு கொடுப்பதே விஷயம்.
இது இன்றைக்கு பிற்போக்கு கருத்தாக இருக்கலாம். ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் எங்கும் சொற்களைக் கொட்டிக் குவிக்கப் போகின்றன இந்த இயந்திரங்கள் (அறிபுனை இதழ்கள் ஏஐ கதைகளை எதிர்கொள்ள முடியாமல் இன்றே தடுமாறுகின்றன). இந்தச் சொற்களுக்கு நான் உரியவன் என்பதை உறுதி செய்ய நாம் என்ன விலை கொடுக்க தயாராக இருக்கப் போகிறோம்?
கலைஞனையும் கலையையும் பிரித்துப் பார்க்கச் சொல்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் கலை இயந்திரமயமாகும்போது கலைஞனின் நிலை என்ன? நான் இயந்திரமில்லை, கலைஞன் என்பதை எப்படி நிறுவுவான்? இதெல்லாம் வெற்றுக் கேள்விகள் அல்ல, இன்னும் சில ஆண்டுகளில் நாம் இந்தச் சுவற்றில் முட்டிச் சாயப் போகிறோம்.
கலையின் தன்மை மாறும்போது கலைஞனின் தன்மையும் மாறுகிறது. இயந்திரத்தன்மை இல்லாத கலை அபூர்வமாகப் போகிறது. எப்படி கள்ளக் காசு நல்ல காசை நசிக்குமோ அப்படியே சொற்பெருக்கு இயந்திரங்கள் மொழியின் பொருளை, அதன் மெய்ம்மையை, சீரழிக்கப் போகின்றன. அப்போது கலைஞன் தன் மேன்மையைக் கொண்டுதான் தன் இடத்தை நிறுவிக் கொள்ள வேண்டியிருக்கும். நிழலாகிவிட்ட மொழியில் அவனது சிறுமையின் நியாயங்கள் போணியாகாது.
அவன் தன் சொற்களுக்கு உருவம் கொடுக்க உயிரையே கொடுக்க வேண்டியிருக்கும், அல்லது தன் வாழ்வையாவது அர்ப்பணிக்க வேண்டியிருக்கலாம். சொல் ஒன்று செயல் ஒன்று என்பது இயந்திரங்களின் சல்லித்தனம், கலைஞன் தன் காதை அல்லது நாவை அறுத்துக் கொடுக்க வேண்டியிருக்கலாம். விற்பனைக்காக அல்ல, அதற்கு தன் ஜீவகளையை அளிக்க.
அவரவர் எச்சங்கள் என்று வள்ளுவர் சொன்னார் இல்லையா, அந்த இடத்துக்கு போய்க் கொண்டிருக்கிறோம்.