பதிவுகள்

ஒரு திறந்த மடல்

இன்று பதாகை மின்னஞ்சல் முகவரிக்கு ஒருவர், "என் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வரவிருக்கிறது. என் கதைகளின் காப்புரிமை நிலை என்ன, உங்களிடம் அனுமதி வாங்க வேண்டுமா?" என்று கேட்டு எழுதியிருக்கிறார். அனைத்து உரிமைகளும் எழுத்தாளருக்கே, என்று சொல்ல ஆசைதான், ஆனால் எடிட்டர் மின்னஞ்சல் முகவரியின் கடவுச்சொல்லே மறந்து விட்டது.

சொல்வனம் முன்னூறாவது இதழ் வரவிருக்கிறது. இரண்டாயிரத்துக்குப் பின் எழுத வந்தவர்கள் பற்றி கட்டுரை கேட்டார்கள், மாதம் ஒன்றாகி விட்டது. ஒரு எழுத்து நகரவில்லை. ஸ்மார்ட்போன் அளவுக்கு அதிகம் பயன்படுத்தியதுதான் காரணம், கவனக்குலைவு நோய் மிகத் தீவிரமாக பீடித்திருக்கிறது. முனைந்து ஒரு காரியம் செய்ய முடியவில்லை.

இன்று அனைத்து இலக்கிய தொடர்புகளும் அறுபட்டுவிட்ட நிலையில், ஒரே ஒரு நண்பர் மட்டும் இரவு பத்து மணியானாலும் போன் செய்து இலக்கியம் பேசுகிறார். தான் படித்த புத்தகங்கள், எழுத்துக் கலை பற்றி பார்த்த யூடியூப் காணொளிகள், அவை வழி அறிந்து கொண்டவை, அவ்வப்போது எழுதிய படைப்புகளின் தான் செய்த புது முயற்சிகள் பற்றி மிக ஆர்வமாகப் பேசுகிறார். அவர் எழுதிய கதைகளை மிக காலதாமதமாகவே படிக்கிறேன், இருந்தாலும் இப்படிச் செய்கிறார். "நான் இதை உன்னிடம் சொல்ல வேண்டும்," என்ற உந்துதல்தான் எழுத்தாளனின் முதல் விசையாக இருக்க வேண்டும். இரண்டாவது விசை, "இதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?".

இணைய எழுத்து பிளாஸ்டிக் டம்பளர் மாதிரி என்று நாஞ்சில் நாடன் சொன்ன நினைவு. அதில் ஒரு சிந்தடிக் வாசனை வருகிறது என்பது அவரது குறிப்புணர்த்தல் என்று நினைக்கிறேன். அதை அவர் வெளிப்படையாகவே சொல்லியிருக்கக் கூடும். எழுதக்கூடிய என் நண்பர்கள் அனைவரும் இணையத்தில் எழுதுபவர்கள், இரண்டாயிரத்துக்குப் பின் வந்த எழுத்தாளர்களில் எத்தனை பேர் இணையத்தில் எழுதாதவர்களாக இருப்பார்கள், இலக்கிய வாசகர்களில் எத்தனை பேர் இணையம் வழியாகவே பெரும்பாலும் இலக்கியம் அறிபவர்களாக இருக்கக்கூடும், அச்சு நூல்கள் படித்தாலும்?

ஒருவர், டிஜிட்டல் தோட்டங்கள் பற்றி வசீகரமாக எழுதியிருந்தார் (A Brief History & Ethos of the Digital Garden இந்தக் கட்டுரை வாசிக்கத்தக்கது). இணைய எழுத்து இரு வகைப்பட்டது - பராமரிக்கப்படாதவை ஓடை போன்றவை, நண்பர் எழுதும் புதுப் புத்தகம் பற்றி அடுத்த சில மாதங்கள் சமூக ஊடகங்களில் பேசப்பட்டலாம். ஒவ்வொரு முறையும் அது மேலுயர்ந்து உரையாடல் அடங்கியதும் அமிழும். காலப்போக்கில் லிங்க் ராட் என்று சொல்லப்படும் விஷயத்தால் ஏறத்தாழ எல்லாமே காணப் பெற அரிதாகும். இவற்றுக்கு மாறாக, பொறுப்பானவர்கள் நடத்தும் இணைய இதழ்களில் பராமரிக்கப்படுபவை தோட்டம் போன்றவை. எது மாறினாலும் எல்லாம் பார்வைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும், அதற்கான பாதைகள் போடப்பட்டு கவனமாக பராமரிக்கப்படும்.

பதாகை ஆறு மாதம் போல் வரவில்லை என்று நினைக்கிறேன். இப்போதே கூகுள் தேடுபொறி அதன் உள்ளடக்கத்தை பின்னுக்குத் தள்ளியிருக்கும். பதாகை எழுத்து இணையத்தில் மெல்ல மெல்ல அடுத்தடுத்த பக்கங்களுக்குச் சென்று மறையும். ஒவ்வொரு ஆண்டும் பதாகை தள முகவரிக்கு பணம் கட்டுகிறார் ஒரு நண்பர். யாரும் எழுதாத, யாரும் படிக்காத தளத்துக்கு அவரும்தான் எத்தனை காலம் பணம் கட்டிக் கொண்டிருப்பார்? ஒரு நாள் அவர் புதுப்பிக்கத் தவறினால் பதாகையில் வந்தவை தேடிப் பிடிக்க முடியாமல் போகும். ஒரு முறை சொல்வனம் லிங்க்குகள் சேதாரமாகி அவற்றை மிகவும் போராடி மீட்டெடுத்தார்கள். சொல்வனம் மக்கள் நல்ல தோட்டக்காரர்கள். பாதைகளைச் செப்பனிட்டு அழகாக வைத்திருக்கிறார்கள். அவர்களும் தொடர்ந்து இதைச் செய்ய வேண்டுமானால் எழுதுபவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும், வாசகர்கள் வருகை தர வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் அவர்கள் மட்டும் எப்படி முகவரியைப் புதுப்பித்துக் கொண்டிருக்க முடியும்?

இரண்டாயிரத்துக்குப் பின் வந்த இலக்கியத்தில் இணையத்தின் பங்களிப்பு அதிகம். தமிழ் இலக்கியம் வளர இணைய இலக்கியம் வளமையுடன் இருக்க வேண்டும். இணையத்தில் இலக்கியம் வளர வேண்டுமானால், நிறைய பேர் எழுத வேண்டும், நிறைய பேர் படிக்க வேண்டும், படித்ததைப் பற்றிப் பேச வேண்டும். இந்தப் பேச்சுதான் ஓடை, இவை தோட்டங்களுக்கு நம்மைக் கொண்டு செல்கின்றன, தோட்டங்களிலிருந்து காய் கனிகளை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்கின்றன. அரசியல் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் இலக்கிய ஆர்வமுள்ள நாமெல்லாம் ஒரே இகோசிஸ்டத்தில் இருக்கிறோம்.

எழுத்தாளர்களிலேயே பல பேருக்கு இது பிடிபடவில்லை. தான் பிடித்த பிற எழுத்து பற்றி எத்தனை பேர் பேசுகிறார்கள், அவை செம்மையாய் பராமரிக்கப்பட இணைய இதழ்களுக்கு தருகிறார்கள்?

பதாகை ஆரம்பித்தபோது ஒரு விஷயம் கவனத்தில் இருந்தது - பேனா இருக்கு, பேப்பர் இருக்கு, உக்காந்து எழுத டேபிள் லைட் பேன் எல்லாம் இருக்கு, ஆனா நாலு பேர் எழுதச் சொல்லிக் கேட்டாதானே எழுத ஆர்வம் வரும், அதான் இப்ப அதிகம் எழுதறது இல்லை, என்று ஒரு மிகப்பெரிய இலக்கியவாதி சொன்னது. நாமும் நாலு பேரிடம் எழுதச் சொல்லி கேட்போம், அப்படி கேட்டு வாங்கி, அவர்கள் எழுதியது பற்றி பேசி, பதிப்பதுதான் இணையத்தில் எழுத்து வளர பெரிய ஊக்குவிப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஓரளவுக்கு அதில் வெற்றி பெற்றோம் என்று நினைக்கிறேன்.

சொல்வனம் இதை தொடர்ந்து முன்னூறு இதழ்களாகச் செய்து வருகிறார்கள். சொல்வனத்தில் எழுதினால் அவர்கள் பக்கத்தை நம் எழுத்து நிறப்புகிறது என்பது ஓரளவு உண்மை, நம்மால் அவர்களுக்கு பேர் கிடைக்கிறது என்பதும் ஓரளவு உண்மை. இவற்றைவிட பெரிய உண்மை, நாம் எழுதுவதால் மற்றவர்கள் எழுதுவது சாத்தியமாகிறது என்பதும் நாம் இன்று எழுதுவது நமக்கு முன்னால் எழுதியவர்கள் பக்கங்களைப் பார்வைப்படுத்த உதவுகிறது என்பதும்தான். சொல்வனம், பதாகை என்றில்லை, எந்த ஒரு இணைய இதழுக்கு நாம் எழுதினாலும் அங்கு ஒரு தோட்டம் வலுவாகிறது, அதன் வழிச் செல்லும் ஓடை வளமாகிறது, தன் பாதையில் உள்ள தோட்டங்களை வளப்படுத்துகிறது.

எழுதும் நாம் ஒவ்வொருவரும் இப்படி ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறோம். நம்மால் நாம் வளர்கிறோம், நம் எழுத்து வளர்கிறது, தமிழ் இலக்கியம் வளர்கிறது. எனவே, எனக்கும் சொல்லிக் கொள்கிறேன், ஒருத்தர் கட்டுரையோ கதையோ கேட்டால், நேரமில்லை, கவனமில்லை என்று அலட்சியப்படுத்த வேண்டாம். சின்னதோ பெரிசோ, எழுதி அனுப்பி அந்தத் தோட்டத்தில் நம் கன்றும் வளர்கிறதா பார்ப்போம்.

சொல்கிறேனே தவிர, நானும் எழுதப் போவதில்லை. சொல்வனம் நண்பர் ஒருவர் என்னிடம் எழுதச் சொல்லி மீண்டும் மீண்டும் கேட்டார், கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறரிடமும் கேட்கச் சொன்னார். நான் எழுதுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, அதைவிட நான் சொல்லி யாரும் எழுத மாட்டார்கள் என்ற நம்பிக்கை உறுதியாக உண்டு. எனவேதான் இங்கே எழுதுகிறேன், இதுவும் எழுத்துதானே!

இருந்தாலும் சொல்வனத்தில் கேட்டார்கள் என்பதற்காக ஏதோ நாலு வரியாவது எழுத முயற்சி செய்கிறேன். இதைப் படிக்கும் நண்பர்கள், குறிப்பாக இணைய இதழ்களில் எழுதும், எழுதிய நண்பர்கள் இந்தப் பதிவை தனிப்பட்ட வேண்டுகோளாக பாவித்து, இங்கு சொன்னதை பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். யாரைப் பற்றி எழுதப் போகிறோம், நம் நண்பர்களைப் பற்றித்தானே? அவர்களும் நம்மைப் பற்றி வேறொரு நாள் வேறொரு இடத்தில் எழுதுவார்கள். இந்த மாதிரி தோட்டங்கள் பற்பல செழிப்பதுதானே வளமான இகோசிஸ்டம் (எக்கோ சிஸ்டம் என்று சொன்னால் தப்பாகிவிடும்)?

solvanam.editor@gmail.com

#literature