வாட்ஸ்அப் குழுமம்
என்னால் எந்த குழுமத்திலும் இருக்க முடிந்ததில்லை. ஒன்று, சத்தமாக பேசுவது போல் நீளநீளமான மெசேஜ்களை நாள் முழுவதும் போஸ்ட் செய்து கொண்டிருப்பேன். இரண்டு, தீவிரமான நிலைப்பாடுகள் இருப்பதால் பிடிவாதமாக சண்டை போட்டுக் கொண்டிருப்பேன். மூன்று, உணர்ச்சிவசப்படுபவன் என்பதால் கோபமாக ஏதாவது சொல்லி விடுவேன். நான்கு, பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லாத காரணத்தால் திடீரென்று வெளியேறி விடுவேன். இதையெல்லாம் பெருமையாக சொல்லவில்லை.
ஏன் சொல்கிறேன் என்றால் இன்று உறவினர்கள் மட்டும் உள்ள ஒரு சிறு வாட்ஸ்அப் குழுமத்தில் சேர்ந்திருக்கிறேன். என் குறைகள் என்ன என்ன என்று பார்க்க வேண்டியிருக்கின்றது. இதையெல்லாம் தவிர்க்க முடியாத போதிலும் அதற்கு வழியில்லாத வகையில் பகிர மட்டும் செய்யலாம், பதில் சொல்லக் கூடாது என்று ஒரு விதி வகுத்திருக்கிறோம். என்ன கோபம் வந்தாலும் தண்ணீர் குடித்து மென்று முழுங்கி விட வேண்டியதுதான்.
ஒரு முறை பேசிக்கொண்டு இருக்கும்போது கோவை சுரேஷ் சொன்னார், "எல்லா இலக்கிய விவாதங்களையும் ஒரு கட்டத்தில் அவர் அப்படித்தான் என்று விட்டுவிட வேண்டும். அப்படியில்லாமல் கடைசி வரை கொண்டு போனால், ஒன்று அவர்கள் ரசனையை சந்தேகிக்க வேண்டி வரும், அல்லது அவர்கள் நேர்மையை." என்னால் மறக்க முடியாத வார்த்தைகள்.
இப்போது, நாளை முதல் அரசியல் மீம்களையும் வீடியோக்களையும் டிவிட்டர் பிட்டுக்களையும் பார்க்க வேண்டியிருக்கும். எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன், சுரேஷ் சொன்னதை கொஞ்சம் மாற்றி:
"எல்லா அரசியல் விவாதங்களையும் ஒரு கட்டத்தில் அவங்க அப்படித்தான் என்று விட்டுவிட வேண்டும். அப்படியில்லாமல் கடைசி வரை கொண்டு போனால், ஒன்று அவர்கள் அறிவை சந்தேகிக்க வேண்டி வரும், அல்லது அவர்கள் நேர்மையை."
அப்படிச் செய்வது அறிவீனம். ஏனென்றால் இது எனக்கும் பொருந்தும்.