காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒரு புதிய துவக்கம்
நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, தான் தன் லாப்டாப்பை ஷட்-டௌன் செய்வதேயில்லை, என்று சொன்னார். அப்போது அது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக நானும் அதை முயன்று பார்த்தேன். நல்ல யோசனைதான்.
என்னைப் போன்றவர்கள் ஒரு செயலைச் செய்வதற்கு தடையாக இருப்பது, துவக்கம்தான். அது மட்டும்தான் என்று சொல்ல முடியாது, அதுவும் ஒரு முக்கியமான காரணம். லாப்டாப் எப்போதும் ஆனில் இருப்பதில் ஒரு பயன், அது திறந்தவுடன் உயிர் பெற்று விடுகிறது. அப்புறம் தாமதிக்க காரணமில்லை.
இல்லை என்று சொல்கிறேனே தவிர எழுத எதுவும் இல்லாதபோது லாப்டாப் ஆனில் இருந்து என்ன பிரயோசனம்? அது வேறு விஷயம்.
இந்த வாரம் ஒரு கட்டுரை தொடர்பாக வேலை செய்தேன். இதையெல்லாம் துவங்கிப் பின் கைவிடுவது வழக்கம். ஆனால் இந்த வாரம் வரிசையாக மூன்று நாட்கள் விடுமுறைகள் வந்திருந்தன. பழைய பிரச்சினைகள் இருந்தாலும், ஒரு மாதிரி தம் கட்டி கொஞ்சம் போல செய்து முடிக்க முடிந்தது.
டச் வுட் என்று சொல்லிக் கொள்கிறேன், தொடர்ந்து இது போல் செய்ய முடியும் என்று தோன்றுகிறது, எல்லாவற்றுக்கும் மனம்தான் காரணம். எதுவும் கஷ்டம் சுலபம் என்பதில் முடிந்து விடுவதில்லை, எல்லாம் இருக்கிறபடியே இருந்தபோதும் மனசில் கொஞ்சம் மாற்றம் வரும்போது சலிப்பு ஒரு பெரிய விஷயமாக இல்லை. அதே லினக்ஸ் தமிழ் விசைப்பலகைதான், அதே டெக்ஸ்ட் எடிட்டர்தான், ஆனால் டார்க் மோடில் மாற்றி எழுத்தைக் கொஞ்சம் போல் பெரிசு பண்ணி அடிக்கும்போது பார்க்க நன்றாக இருக்கிறது, திருத்தித் திருத்தி எழுதுவது சிரமமாக இல்லை.
இது இப்படியே நல்லபடி போனால், இன்று என்ன செய்தேன், என்ற பாணியில் தினமும் அப்டேட் செய்வதாக இருக்கிறேன்.