பதிவுகள்

எழுத்தாளனின் பொய்கள்

நாமானால் பிக் பிளாட்பாரத்திற்கு எதிராக கொடி உயர்த்தி புறம்போக்கு நிலத்தில் கொட்டகை போட்டு, "எப்படியும் இங்கேதான் வரப் போறீங்க," என்று குந்தியிருக்கிறோம். ஆனால் ஃபேஸ்புக் எழுத்துக்கு இன்னும் மரியாதை குறைந்த மாதிரி தெயவில்லை.

"ஸ்ரீதர் உங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்," என்று மறு நாளே ஒரு நண்பர் போன் செய்து அவர் எழுதிய அத்தனையையும் படித்துக் காட்டினார். போகட்டும். ஆனால் இப்போது இன்னொரு நண்பர் அதை ஒரு வரி விடாமல் திரைச்சொட்டு எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்கிறார்- "ஸ்ரீதர் உங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்."

எழுத்தாளர்களின் பொய்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை, சில சமயம் உண்மைக்கு நிகரானவை, அபூர்வமாக அப்படியே உண்மையாக இருக்கக்கூடியவை. "இது எதையும் நான் சொல்லவில்லை," என்று நான் பதில் சொன்னால், "சரி, ஜாலிக்குதானே," என்று சொல்லும் வாசகர்கள் ஸ்ரீதருக்கு இருக்கலாம்; அவரது தேர்ந்த எழுத்தாளுமையால் கவரப்பட்டு, "இது ஏன் உண்மையாக இருக்காது? ப்ரூஃப் இருக்கா?" என்று கேட்கும் வாசகர்களையும் அவர் பெற்றிருக்கலாம்; வியாசன், காளிதாசன், கம்பன் வரிசையில் ஸ்ரீதரையும் வைத்து, "இனி காலம் இப்படித்தான் நடந்தது என்று நம்பப் போகிறது, எனவே இப்படித்தான் நடந்தது, நீ கம்னு கிட," என்று புன்னகைக்கும் வாசகர்கள் ஸ்ரீதருக்கு இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன், இருந்தாலும் சொல்ல முடியாது; எனவேதான் இதைப் பதிவு செய்வது அவசியமாகிறது - "மக்களே, நம்பாதீங்க. இது அத்தனையும் பொய்யி!"

#literature