பதிவுகள்

பட்ஜெட்

இன்றைக்கு பட்ஜெட் பற்றி பேச்சு வந்தது. என் மேல் எத்தனை வரி போடுகிறார்கள் என்பது கூட எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. ஆண்டுக்கு இருபது லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள எல்லாருக்கும் முப்பது சதவிகிதம்தான் வரி என்பது உறுத்தலாக இருக்கிறது.

மாசம் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவன் நூறு ரூபாய் தொலைப்பதும் லட்சம் ரூபாய் சம்பாதிப்பவன் பத்தாயிரம் ரூபாய் தொலைப்பதும் சதவிகித கணக்கில் ஒன்றுதான். ஆனால் அது யாரை அதிகம் பாதிக்கும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

இன்றைக்கு ஒரு பெண் மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதித்தால் அதிக பட்சம் அவள் ரிடையர் ஆகியிருக்கும்போது ஒரு வீடு வைத்திருப்பாள், பிள்ளைகளை படிக்க வைத்து திருமணம் செய்திருப்பாள், மருத்துவ செலவுகளுக்காக சில லட்சங்கள் வைத்திருப்பாள். இத்தனைக்கும் மாதம் இரண்டு லட்சம் நமக்கெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய சம்பளம். இதே ஆசையும் தேவையும் மாசம் ஒரு லட்சம் சம்பாதிப்பவனுக்கு இருக்காதா? அவனது பத்து பதினைந்து சதவிகிதத்தின் மதிப்பு இவளது முப்பதைக் காட்டிலும் அதிகம். அது போல் அவளது முப்பதும் அந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் வருமானம் பார்ப்பவனின் முப்பதும் எப்படி ஒரே மதிப்பு கொண்டிருக்க முடியும்?

கேட்டால், அதிக வரி போட்டால் யாரும் முதல் போட மாட்டார்கள், முனைய மாட்டார்கள், எல்லாம் மோசம் போய் விடும் என்று சொல்கிறார்கள். என்ன விஷயம் என்று தெரியவில்லை, ஏழைகள் பட்டினி போட்டால்தான் வேலை செய்வார்கள், வசதி செய்து கொடுத்தால் சோம்பேறி ஆகி விடுவார்கள். ஆனால் பணக்காரர்கள் மட்டும் பணம் கொட்டக் கொட்ட இன்னும் முனைந்து வேலை செய்வார்கள், அதில் கொஞ்சம் அதிகம் வரி கேட்டால், போடா போ என்று இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்து விடுகிறார்கள்.

#inequality