கால் மணி நேர இடைவெளியில்
கால் மணி நேரத்தில் எவ்வளவு எழுத முடியுமோ அவ்வளவு எழுதினால் போதும்.
எதுவும் செய்வதில்லை என்பதால் எதையாவது செய்து கொண்டிருக்கிறேன்.
நேற்று இரவு தூங்கும்போது மணி ஒன்றரை. காரணம், துருக்கி தேர்தல் முடிவுகள். ஏமாற்றம்தான். எர்டோகன் ஐம்பது சதவிகிதத்துக்கு குறையும் வரை மொபைல் திரையை புதுப்பித்துக் கொன்டிருந்தேன். அப்புறம் ஒரு அரைகுறை திருப்தியுடன் தூங்கிப் போனேன்.
இதற்கு இடையில் ஒரு நல்ல பதிவும் பார்த்தேன். கேரளாக்காரர் ஒருத்தர் எழுதியது. ஒரு முன்னிலை மென்பொருள் நிறுவனர், செயற்கை நூண்ணறிவுத் துறையில் பிஎச்டி. இனி எல்லாம் வேலை கிடைப்பது கஷ்டம், அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் இவற்றை அதிக அளவில் பயன்படுத்தப் போகின்றன, நீதி கிடைப்பதும் கடினம் என்று எழுதுகிறார் அவர். தூக்கம் போக அதுவும் ஒரு காரணம் என்றால் யாரும் நம்பப் போவதில்லை. இதன் தீவிரத்தை உணர்ந்தவர்கள் யாரும் என் தொடர்பு வட்டத்திலும் இல்லை.
பருவநிலை மாற்றம் குறித்து முதலில் மெஹ் என்று சொன்னவர்கள் அப்புறம், அதெல்லாம் சரி, அதுக்கென்ன பண்ண முடியும் என்று ஒரே தாவு தாவியது மாதிரிதான் இந்த விஷயத்திலும் நடக்கப் போகிறது.