நடப்பு நிலவரம்
பெரும்பாலும் வீட்டு வேலைகள் செய்யும்போதுதான் படம் பார்க்கிறேன், முழு கவனம் அதில் இருப்பதில்லை. எந்த படமும் தொடர்ந்து பார்ப்பதில்லை. நெட்பிளிக்சில் The Village என்ற ஜப்பானிய படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன், இன்று காலை சௌசௌ வெட்ட உபகரணங்களை டேபிளில் வைக்கும்போது நேற்று என்ன படம் பார்த்தோம் என்பது நினைவு வரவில்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தபின் ஜப்பானிய படம் என்று ஞாபகம் வந்தது, அப்புறம் noh நாடகம், அப்புறம் தி வில்லேஜ் என்று பிடிபட்டுவிட்டது. கொஞ்ச நேரம் பார்த்தேன், பின்னர் கொஞ்ச நேரம் விட்டு சாப்பிடும்போது.
ஒரே வீட்டில் அல்லது அறையில் அல்லது வேலையில் என்று அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் சூழ்நிலை இருந்தால், ஒற்றுமை வேற்றுமைகளுக்கு அப்பால் புழங்குவதற்கு வாய்ப்புக்கள் இருக்கும். ஆனால் சமூக ஊடகம் அப்படியில்லை. ஒன்று, பொது நோக்கம் இருக்க வேண்டும், அல்லது உலகம் இப்படி இருக்கிறது, அதில் நம்மைப் போன்றவர்கள் நிலை இப்படி, நமக்கு வேண்டாதவர்கள், அல்லது நாம் நன்றாக இருப்பது பிடிக்காதவர்கள், நிலை இப்படி, என்று ஒரு கதை ஓட்டுவதில் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ளும் பக்குவமாவது வேண்டும். எனக்கு அப்படி எந்த வகையிலும் இணைந்து கொள்ளும் பொறுமை இல்லை, ஏன் இங்கே எழுதுகிறேன், புதுப்புது சமூக ஊடகங்களில் ஆர்வம் கொள்கிறேன் என்பது புரியவுமில்லை.