ஃபெடிவர்ஸ்
இன்றைய செய்தி ஃபெடிவர்ஸ் பற்றி சிறிது யோசித்ததுதான். நிஜ உலகில் சாத்தியமில்லாத தனி மனித ஸ்வராஜ்யமும் கூட்டுறவும் ஒருத்தரை ஒருத்தர் எக்ஸ்பிளாயிட் பண்ணாத நல்லிணக்கமும் இணையத்தில் சாத்தியமாக முடியும். இப்போது நடந்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் அந்த திசையில் போய்க் கொண்டிருக்கின்றன. இது பற்றி விரிவாக யாராவது தமிழில் எழுத வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் நாம் இருக்கிற இடத்தில் ஒரு பெட்டிக்குள் எழுதி அது எங்கே போக வேண்டுமோ அதன் முகவரியை எழுதி அனுப்புவது, நாம் எழுதுவது மற்றும் நம் தகவல்கள் நம் கட்டுப்பாட்டில் இருப்பது, யார் எங்கே என்ன எழுதி அனுப்பினாலும் அதை நாம் இருக்கும் இடத்தில் நாம் விரும்பும் வடிவ அமைப்பில் வாசிப்பது, அவர்களுடன் உரையாடுவது போன்ற விஷயங்கள்.
மத்திய வர்க்கத்தில் ஓரளவு விஷய ஞானம் இருப்பவர்கள் தங்கள் சொந்த சர்வரில் தம் இணைய தளங்கள், சமூக ஊடகங்களை நிர்வகிக்க முடியும். இதற்கு மாதம் பத்து பதினைந்து டாலர்கள் ஆகலாம், இந்தியர்களில் சிலருக்கும்கூட இது அதிக செலவாக இருக்காது.
ஒவ்வொருத்தருக்கும் தனக்கே தனக்கு என்று ஒரு டிவிட்டர், பேஸ்புக், யூட்யூப், இன்ஸ்டாகிராம், இன்னும் என்ன தேவையோ அது இந்தக் கட்டணத்தில் சாத்தியம். அவர்கள் விருப்பப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்டு மார்க், ஜாக் போல் சமூக ஊடக தளம் நிர்வகிக்கலாம், ஒத்த சிந்தனை உள்ளவர்களோடு கலந்து பழகலாம். இதுவும் இன்னும் பலவும் சாத்தியமாகப் போகின்றன.