பதாகை பிப்ரவரி முதல் இதழ்
ஒரு வழியாக பதாகை வேலை இந்த இதழ் முடிந்தது. ஶ்ரீதர் கதை, மற்றும் எஸ். சுரேஷ் கதைகள் இருக்கின்றன. ஶ்ரீதர் பல ஆண்டுகளுக்குப் பின் எழுதுகிறார் என்று நினைக்கிறேன். தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும். இருவர் கதைகளும் புதிர்த்தன்மை இல்லாத வெளிப்படையான கதைகள். ஆனால் உள்விஷயம் இருக்கிறது.
இவர்கள் கதைகள் போக ஸிந்துஜா மற்றும் தருணாதித்தன் கதைகளும் இருக்கின்றன. ஸிந்துஜா தற்போது எழுதும் கதைகளில் உறவுச் சிக்கலில் இருக்கும் பெண்களைப் பார்க்க முடிகிறது. இந்தக் கதையும் அப்படிதான், முடிவு கொஞ்சம் வேகமாக வந்து விட்ட மாதிரி தோன்றினாலும் வித்தியாசமாக இருக்கிறது. தருணாதித்தன் கதையே வித்தியாசமான ஒன்றுதான். முடிவை இன்னும் துணிச்சலான இடத்துக்கு கொண்டு போயிருக்கலாம்.
ஐந்தாவதாக ஏ. நஸ்புள்ளாஹ் சிறுகதை. கவிஞர்கள் எழுதும் கதைகளுக்கு உள்ள தனித்தன்மை இதிலும் உண்டு. ஆனால் எல்லோரைப் போலவே முடிவு ஒரு பாய்ச்சலாக இல்லை. அதை எதிர்பார்க்கவும் கூடாது, "கதை எதுக்கு முடியும்போது ஒரு தாவு தாவணும்?" என்ற கேள்வி வரும். நியாயம்தான், ஆனால் நமக்கும், ஏன் புதிய இடத்துக்குப் போகவில்லை, என்று தோன்றலாமல்லவா? ஸிந்துஜா போயிருக்கிறார் ஆனால் அவசரப்பட்ட மாதிரி ஒரு உணர்வு வருகிறது.
கண்மணி குணசேகரன் தொகுப்பு பற்றி செமிகோலன் எழுதியிருக்கிறார். விமரிசனம், மதிப்பீடு என்பதைவிட அறிமுகம் என்று சொல்லலாம்.
படித்துப் பாருங்கள், பதாகை பிப்ரவரி முதல் இதழ்.