புதிய பயனர்
பல நாட்களுக்குப் பின், வாரங்கள் என்று சொல்லலாம், கோவையிலிருந்து சுரேஷ் பேசினார். வழக்கம் போல என்னென்னவோ பேசி முடித்தபின், இப்ப என்னவாவது எழுதறீங்களா, என்று கேட்டார். எழுதுகிறேன் என்று சொல்வதா இல்லை என்று சொல்வதா!
எழுதறேன் ஆனால் அது சீரியஸ் இல்லை, எப்ப வேணா டெலிட் பண்ணிடுவேன், எழுதாமல் கூட இருக்கலாம், அதான் சொல்ல வேண்டாம்னு பாக்கறேன், என்றேன். சும்மா சொல்லுங்க, நான் மட்டும் என்ன படிக்கவா போறேன், என்றார். சரி, நல்லது, என்று இந்த முகவரி கொடுத்தவன் இங்கே வந்து பார்த்தால் எழுதி பல நாட்கள் ஆகிறது.
சரி எதையாவது எழுதலாம் என்று எழுத வேண்டியதில்லை. விஷயம் இருக்கிறது.
பெடிவர்ஸ் என்று சொன்னேன் அல்லவா, அதில் போட்டோக்களுக்கு என்று ஒரு தளம் இருக்கிறது. ஒரு காலத்தில் என் போட்டோக்கள் நண்பர்கள் மத்தியில் பேஸ்புக்கில் பிரசித்தம் என்பதை மறைக்கப் போவதில்லை.
சரி நாமும் இந்த தளத்தைப் பயன்படுத்தினால் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும் என்று இங்கு இணைந்து இரண்டு படங்களையும் போட்டு விட்டேன்.
சுரேஷ் சொன்னது மாதிரியே பார்க்க மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படியே பார்த்தாலும் முகநூலில் இது பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தால் நல்லது. சொன்னால் கொஞ்சம் கஷ்டம்தான்.
காரணம், நல்ல காரியம் எதுவும் தண்டிக்காமல் விடப்படுவதில்லை.