பதிவுகள்

வுட்ஸ் லாட்

இன்று பிங்க்கை தரவிறக்கம் செய்து ஜிபிடிசாட்டால் வலுக்கூட்டப்பட்ட தேடுபொறிக்கு பதிவு செய்தேன். காத்திருப்பு பட்டியலில் வைத்து விட்டார்கள்.

புதிய ஃபீட்களை உருவாக்கித் தரும் தளமொன்றை கண்டுபிடித்தேன். மிகவும் அருமையாக வேலை செய்கிறது. நேரம் போனதே தெரியவில்லை.

கூகுள் ரீடர் இருந்த காலத்தில் 'வுட்ஸ் லாட்' என்று ஒரு தளம் இருந்தது. மிக, எப்படிச் சொல்வது, சராசரிகளுக்கு அப்பாற்பட்ட அறிவியக்கம் கொண்ட ஒருவர் தினமும் அடர்த்தியான கவிதைகள், புரிந்து கொள்ள முடியாத கட்டுரைகள், புகைப்படங்கள், கலை வடிவங்கள் என்று பல்வகைப்பட்ட விஷயங்கள் கொண்ட நீண்ட பதிவுகள் இடுவார். ஆனால் ஃபீட் கிடையாது. RSS2 என்ற ஒரு தளம் மூலம் ஒரு ஃபீட் உருவாக்கி அதை வாசிக்க முயற்சி செய்தேன். திடீரென்று நின்றுவிட்டது. சில நாட்கள் கழித்து ஒரு பதிவு வந்தது.

அந்த தளத்த்துக்கு உரியவர் இளைஞர். நீண்ட நாட்களாக உயிருக்கு அச்சுறுத்தலான ஒரு வியாதியின் வலிகளுக்கு நடுவே இந்த தளத்தில் இடுகையிட்டுக் கொண்டிருந்தவர் இறந்து விட்டார் என்று அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் பதிவு செய்ததுடன் தளம் முடிவுக்கு வந்தது. எனக்கு இறந்தவரை நினைக்க வருத்தமாக இருந்தது. இப்போதும்.

அவருக்கு சாரமுள்ள விஷயங்களை பகிர்ந்து கொள்வது மரணத்தின் கொட்டுவாயிலும் தேவையாக இருந்திருக்கிறது.

#legacy #websites