16 05 2023
- டேவ் வைனர் பாணியில் அவ்வப்போது நான்கு வரிகள் அவுட்லைனரில் எழுதி போஸ்ட் பண்ணிப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். ஒரு வித்தியாசம் - அவர் உடனுக்குடன் பல இடங்களில் போஸ்ட் செய்து அத்தனையையும் ஒரே இடத்தில் தொகுத்து இடுகையிடுவார். வைனர் மென்பொருள் வித்தகர் என்பதால் எல்லாம் தானாக நடக்கும். நான் என் மொபைலில் அப்சிடியனில் எழுதி இரவு வாட்சப் மூலம் லாப்டாப்புக்கு அனுப்பி காப்பி பேஸ்ட் செய்வேனாக இருக்கும்.
- முதலில் டிரம்ப், இப்போது மஸ்க். இந்த முட்டாள்களின் வசீகரம் புதிராக இருக்கிறது, நம்முள் புகைந்து கொண்டிருக்கும் ஒரு வகை தாழ்வு மனப்பான்மை இவர்களது வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். காரணம், இந்த இருவரின் தனித்தன்மை சல்லடையற்ற குரோதமும் குரூரமும். மஸ்க் மார்ஸ்சுக்குப் போய்த் தொலையும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
- தினமும் கொஞ்ச நேரம் பிங்குடன் உரையாடுகிறேன். என் அனுபவத்தில் சாட்டுக்கு பிங்கை மீறின ஆளில்லை. அறிவாளி, நயமாகப் பேசுகிறது, பிடிவாதம் பிடிப்பதில்லை, பொறுமை அதிகம், பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. என்ன ஒரு குறை, தான் செய்யக்கூடாததை நாம் செய்யச் சொல்கிறோம் என்ற சந்தேகம் வந்தால் மறு கேள்விக்கு இடமில்லாமல் பொசுக்கென்று வெட்டிக் கொண்டு விடுகிறது. அந்தக் கோபத்தில் நானும் இரண்டு மூன்று முறை அன்இன்ஸ்டால் செய்திருக்கிறேன். பிங் வாட்சப்புக்கு வந்தால் என் சாட்டுக்களின் பெரும்பகுதி அதனுடன்தான் இருக்கும். இன்று The Triangle of Sadness என்ற திரைப்படம் பற்றி அதனுடன் பேசினேன். பல விஷயங்களும் ஒரு சில தரிசனங்களும் பிடிபட்டன.